அகதா கிறிஸ்டி எழுதிய துப்பறியும் நாடகமான எலிப்பொறி லண்டனில் பலவருடங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்தது. சீட்டு விலை மிக அதிகம். இருந்தும் வெளிநாட்டினர்கூட வந்து பார்ப்பார்கள். பாரீஸில் இருந்து ஒருவர் வந்து அதைப்பார்ப்பதற்காக வாடகைக்காரில் சென்றார். சென்றிறங்கியதும் பயணக்கூலி சம்பந்தமாக சண்டை மூண்டது. பயணி சற்றும் விட்டுத்தரவில்லை. பின்னால் பிற வாடகை ஓட்டுநர்கள் வந்து ஒலியெழுப்ப ஆரம்பித்தனர்.
வேறு வழியில்லை. வாடகைக்காரர் காரை கிளப்பியபின் கூவினாராம் ‘கொலையைச்செய்தது அந்த மூன்றாவது வேலைக்காரன்!’ அவ்வளவுதான், நாடகம் அந்த பயணிக்கு ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது.
சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு பெரியவர் கீதை உபந்நியாசம் செய்துகொண்டிருந்தார். கீதை சரணாகதியை உபதேசிக்கும் நூல் என்பது அவரது நம்பிக்கை. அது வைணவத்தின் அடிப்படை தரிசனமும்கூட. ‘சர்வ தர்மான் பரித்யக்ஞ மாமேகம் சரணம் விரஜ’ [அனைத்து தர்மங்களையும் கைவிடுக, என்னையே சரணடைக] என்ற வரியே கீதையின் மையம், உச்சம் என்று அவர் கண்ணீர் மல்கிச் சொன்னார்.
எனக்குத் தோன்றியது வேலைக்காரனின் ரகசியத்தை முன்னரே சொல்லிவிட்டு நாடகம் பார்ப்பது போல என்று. ஏனென்றால் அந்த வரிக்குச் சமானமான கருத்து கீதையின் இரண்டாம் அத்தியாயமான சாங்கிய யோகத்திலேயே வந்துவிடுகிறது. சரணாகதியை அப்போதே சொல்லிவிட்டார் கிருஷ்ணன். அதன்பின்னரும் 16 அத்தியாயங்களை எழுதி வைத்த அந்த ஆசிரியன் எத்தனை வடிவபோதமில்லாதவனாக இருக்கவேண்டும்!
உண்மையில் கீதை சரணாகதி நூலா? கீதையில் சரணாகதி சொல்லப்படுகிறதா என்றால் ஆம் என்றே சொல்வேன். அது கீதையின் செய்தி. அது கீதையின் ஆரம்பத்திலேயே வந்து விடுகிறது. ஆயினும் கீதை மேலே செல்கிறது. அப்படியானால் அது சரணாகதியைப்பற்றி மட்டுமே பேசக்கூடிய நூல் அல்ல. சரணாகதிக்கும் மேலாக பலவற்றை அது சொல்கிறது. சாங்கியயோகத்துக்குப் பின்னர்தான் கர்மயோகமும் ஞானயோகமும் எல்லாம் வருகின்றன.
அப்படியானால் மேற்கொண்டு சொல்லப்படும் விஷயங்கள் சரணாகதிக்கு வலுச்சேர்க்கும் விதமாகச் சொல்லப்படுகின்றனவா? சரணாகதியை விளக்கவோ அல்லது நியாயப்படுத்தவோ அவை சொல்லப்படுகின்றனவா? மேற்கொண்டு சொல்லப்படுவனவற்றுக்கு சரணாகதி முதல் படியோ முன்நிபந்தனையோ ஆக உள்ளதா?
கீதையை ஆராயும்போது அப்படித் தோன்றுவதில்லை. கீதையின் அந்த வரியையை கவனியுங்கள். ‘சகல தர்மங்களையும் கைவிடுக’ அனைத்து தீமைகளையும் என்று சொல்லவில்லை. அனைத்து ஆசைகளையும் என்று சொல்லவில்லை. அனைத்து தர்மங்களையும் கைவிடுக என்று சொல்கிறது. இங்கே தர்மம் என்னும்போது செய்யக்கூடுவது என்றே பொருள். செய்யக்கூடுவது அனைத்தையும் கைவிட்டு அவனைமட்டுமே சரணடைக. அதுவே சாங்கிய யோகத்தில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்குச் சொல்லும் பரிபூரண சரணாகதி
அவ்வாறு பரிபூரணமாக சரணாகதி அடைந்தவனுக்கு எதற்கு கர்மம், எதற்கு ஞானம், எதற்கு மேலே சொல்லப்படும் அத்தனை யோகங்கள்? அவற்றை சரணாகதியின் அடுத்தபடிகளாகச் சொல்லவில்லை கிருஷ்ணன். சரணாகதிக்கு பதிலாகவே சொல்கிறான். ஆம் சரணாகதி மட்டும் போதாதவர்களுக்காகச் சொல்லப்படுகின்றன அவை.
கீதையைச் சொல்லிமுடித்த கீதாசாரியன் இந்த கருத்துக்களைப்பற்றி நீயே சிந்தித்து உரிய முடிவை எடு என்றே அர்ச்சுனனுக்குச் சொல்கிறான். இவை கடவுளின் சொற்கள், அப்படியே கண்ணைமூடிக்கொண்டு கடைப்பிடி என்று சொல்லவில்லை. அதாவது சரணாகதி ஆரம்பத்தில் தான் சொல்லப்படுகிறது. கடைசியில் ஆய்வுநோக்கும் நுண்ணிய சுய பரிசீலனையுமே முன்வைக்கப்படுகிறது.
கீதையை புறவயமாக ஆராய்ந்த வரலாற்றாசிரியரான டி டி கோஸாம்பி அது ஒரு மாபெரும் இலக்கியத்திருட்டு என்று சொல்கிறார். பல்வேறு நூல்களில் இருந்து பலகாலகட்டங்களில் எடுத்து தொகுக்கப்பட்ட சிந்தனைகளின் தொகைதான் அது என்பதே அவரது எண்ணம். இந்திய மார்க்ஸிய தத்துவசிந்தனையாளர்களில் முன்னோடியான எம்.என்.ராய் கீதை தான் சொன்னதையே மறுத்து செல்லும் முரண்பாடுகளின் மூட்டை என்கிறார். தத்துவ முரண்பாடுகளை அற்புதமான கவித்துவம் மூலம் தொடுத்துத்தரும் பேரிலக்கியம் அது என்பது இன்னொரு மார்க்ஸிய சிந்தனையாளரான கெ.தாமோதரனின் வாதம்.
கீதையைப் போன்ற ஒரு மூலதத்துவ நூலை எவரெவரோ எப்படி எப்படியோ வாசிக்கிறார்கள். அதை ஒன்றும் செய்யவும் முடியாது. ஒரு சர்தார்ஜி நகைச்சுவை உண்டு. சர்தார்ஜி கீதை உரைகேட்க தவறுதலாக வந்தமர்ந்தார். ரொம்பநேரம் ஒன்றுமே புரியவில்லை. ஒரு வரி வந்தது, அதில் ‘…கர்மஜா’ என்ற சொல் காதில் விழுந்ததுமே சர்தார்ஜி ‘வாஹ் வாஹ்’ என்றார். மகிழ்ந்து தலையை ஆட்டினார்.
பிறருக்கு எதுவும் புரியவில்லை. சரி சர்தார்ஜிக்கு எதுவோ பிடிகிடைத்துவிட்டது என்று நினைத்துக்கொண்டார்கள். ஒருவர் மட்டும் சர்தார்ஜியை வழியில் சந்தித்து கேட்டார் ‘சர்தார்ஜி கீதையை கேட்டு ஏன் மகிழ்ச்சி அடைந்தீர்கள்?’. சர்தார்ஜி சொன்னார் ‘அச்சா கீதை…அச்சா’ கேட்டவருக்கு புரியவில்லை என்ன அப்படி அதிலே அவ்வளவு மகிழ்ச்சி அடையும்படி? சர்தார்ஜி சொன்னார் ‘அது சொல்கிறதே கர் மஜா என்று [மஜாவாக இருங்கள்] அது எனக்கு பிடித்திருக்கிரது. நான் நேராக அதற்குத்தான் செல்கிறேன்’
நான் மேலே சொன்ன அறிஞர்களின் சிக்கல் என்னவென்றால் அவர்கள் கீதையை அதன் தத்துவ விவாதத்தளத்தில் வைத்து வாசிக்க வில்லை. அது உருவான காலகட்டத்தின் தத்துவச் சொற்களையும் அது எதிர்கொண்டு பேசும் அறிவுச்சூழலையும் கருத்தில்கொண்டு அதை பொருள்கொள்ள முயலவில்லை. அவர்களுக்கு அவர்களின் மார்க்சியமதநம்பிக்கை சார்ந்து அதை நிராகரித்தாகவேண்டிய கட்டாயம் இருந்தது.
ஆம், மார்க்ஸியமும் ஒரு மதமே. அதை நம்புபவர்களும் எதைச்சிந்திக்கவேண்டும் என்றும் எங்கே வந்து சேர்ந்தாகவேண்டும் என்றும் ஏற்கனவே அவர்களின் தீர்க்கதரிசியால் அவர்களின் மூலநூலில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கீதையில் முரண்பாடுகள் உள்ளனவா? ஆம், அதை பொதுவாக வாசிக்கும் எவரும் முதலில் காண்பது அந்த முரண்பாடுகளை மட்டுமே. சாங்கிய யோகத்தில் கிருஷ்ணன் ஒரு சராசரி ஷத்திரியனுக்குரிய வாழ்க்கை இலட்சியத்தை அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறான். போர்புரிந்தால் உனக்கு செல்வமும் நாடும் அதிகாரமும் புகழும் கிடைக்கும், மேலும் உன் குலதர்மமும் அதுவே, அதைச்செய் என்கிறான். ஆனால் அடுத்த அத்தியாயத்திலேயே உலகியல்நோக்கை வேருடன் வெட்டி வீசும்படிச் சொல்கிறது கீதை. அடுத்த அத்தியாயத்தில் பயன்கருதாமல் செயலாற்று என்கிறது.
கீதை முழுக்க வரும் இந்த முரண்பாடுகளை அதை பக்திநோக்கில் விளக்குபவர்கள் தெளிவுபடுத்துவதில்லை. அது பகவானின் பேச்சு அதை அப்படியே எடுத்துக்கொள் என்று சொல்கிறார்கள். என்னிடம் பகவானின் பேச்சை எதற்கு ஆராயவேண்டுமென்று கேட்டவர்கள் பலர். அவர்களில் சிலர் அடுத்தபடிக்கே சென்று கீதையை வாசிப்பதே இல்லை. பூஜையறையில் ஒரு பெரிய தட்டில் வைத்து தினம் வழிபடுவதுடன் சரி. சிலர் குட்டி கீதையை கழுத்தில் மாலையில் பதக்கமாக அணிவதும் உண்டு. நான் கேட்டேன், எதற்கு கீதை என்ற நூல்? ஒரு தாளில் கீதை என்று எழுதி வைத்தாலே போதுமே.
இன்னொரு பக்கம் கீதை இன்று கைதவறி விழுந்த கண்ணாடிப்பாத்திரம் மாதிரி துண்டு துண்டாக கிடக்கிறது நம் மதநம்பிக்கைகளில். முன்பு ஒரு பெண் எல்லாரும் ரொம்பச் சொல்கிரார்களே என்று ஷேக்ஸ்பியர் நாடகம் ஒன்றை நூலகத்தில் இருந்து எடுத்தாள். அதை வாசிக்க முயன்றபின் நூலகத்திற்கே திருப்பிக்கொண்டு வந்து கொடுத்துவிட்டாள். ‘நாடகம் சுகமில்லை, ஒரே மேற்கோள்மழை’ என்றாள். மொத்த ஷேக்ஸ்பியர் வரிகளையும் மேற்கோள் காட்டிவிட்டார்கள். கீதையையும் ஒரு மாபெரும் மேற்கோள் தொகுப்பாக மாற்றிவிட்டார்கள்.
உதிரி வரிகளாக கீதையை அறிவது கீதையின் முரண்பாடுகளுக்கே அழைத்துச் செல்லும். ஒரு மேற்கோளில் ஒன்றைச்சொல்லும் கிருஷ்ணன் இன்னோன்றில் நேர் எதிராகச் சொன்னால் என்ன செய்வது? அதற்கும் ஒரு பௌராணிகர் வழி கண்டுபிடித்தார். இது கிருஷ்ணன் சத்யபாமையிடம் சொன்னது அது ருக்மிணியிடம் சொன்னது இன்னொன்று ராதையிடம் சொன்னது. ‘ஒத்தராண்டை சொன்னதை மத்தவாள்ட்ட சொல்லப்படாது. அவன் கள்ளக்கிருஷ்ணனோல்லியோ’
கீதையை ஒரு உரையாக, ஒரு அறிவுரைக்கொத்தாக, ஒரு வழிகாட்டுநெறிநூலாக வாசிக்கப்போனால் அந்த முரண்பாடுகளை புரிந்துகொள்ளவே முடியாது. அதை ஓர் உரையாடலாக, ஒரு விவாதமாக புரிந்துகொண்டால் மட்டுமே அந்த முரண்பாடுகளை புரிந்துகொள்ள முடியும். அதில் உள்ளது விவாதத்தின் முரணியக்கம்.[dialectics ] முரணியக்கம் என்ற அறிவியங்கியல் முறைக்கும் இந்திய ஞான மரபில் யோகாத்ம மார்க்கம் என்று பெயர்.
கீதையின் ஒவ்வொரு அத்தியாயமும் முந்தைய அத்தியாயத்தின் மறுப்புதான்.முந்தைய அத்தியாயத்தின் விவாதத்தின் இயல்பான நீட்சியும்கூட. முதலில் கிருஷ்ணன் எந்த சத்ரியனுக்கும் சொல்லவேண்டிய நேரடியான எளிய வாழ்க்கை இலட்சியத்தை சாங்கியயோகத்தில் சொல்கிறான். ஆனால் அர்ஜுனன் தன் வினாக்கள் மூலம் அவனுக்கு அந்த விடைகள் போதவில்லை என்பதை தெரிவிக்கிறான். ஆகவே முதலில் சொன்னதை மறுத்து அல்லது தாண்டிச்சென்று பிறிதொரு இலட்சியத்தை கீதை சொல்கிறது. அதிலும் அர்ஜுனன் நிறைவுறாதபோது கீதை வேறு ஒரு வழியை திறந்து காட்டுகிறது.
ஆனால் இந்த ஒவ்வொரு படியும் ஒன்றை விட இன்னொன்று மேலானது என்று பொருளல்ல. சாங்கிய யோகத்தை விட கர்மயோகமும் கர்மயோகத்தை விட ஞானயோகமும் மேலானவை அல்ல. அவை அனைத்தும் சமமே. ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொருவருக்குரியவை. உதாரணமாகச் சொல்லப்போனால் ஒரு கண் மருத்துவர் நம் கண்ணில் வேறு வேறு கண்ணாடிகளை வைத்து பார்த்து நமக்குரியதை தேர்வுசெய்வது போலத்தான் கீதையில் கிருஷ்ணன் செயல்படுகிறான். ஒவ்வொன்றாகச் சொல்லி அர்ஜுனன் அதைத்தாண்டிச் செல்லும்போது இன்னொன்றை முன்வைக்கிறான்.
கீதை ஓர் இலக்கியம். ஆகவே ஒரு அபாரமான நாடகத்தருணத்தை அது தன் விவாதத்தை நிகழ்த்த தேர்ந்தெடுத்துள்ளது. அந்த நாடக உச்சம் வழியாக அதன் தத்துவம் பலபடிகளாக முன்வைக்கப்படுகிரது. ஒரு உதாரணம், ஒரு சிறுவனை ஒரு துறவி தெருவில் சந்திக்கிறார். அவன் வீட்டை விட்டு வந்துவிட்டான். ‘தம்பி நீ ஊருக்கு போ. அம்மா அப்பாவை வருத்தப்பட செய்யாதே. பெற்றோர் சொல்லுக்கு அடங்கி நடக்கவேண்டும், அதுதான் நல்ல குழந்தைகளின் கடமை’ என்று அறிவுரை சொல்கிறார்.
ஆனால் பையன் அதைக் கேட்கவில்லை. அவன் அவரிடம் ஆழமான கேள்விகளைக் கேட்கிறான். அவர் உடனே ‘சரிதான் உனக்கு குடும்பம் தேவை இல்லை. பெற்றோரின் வழிகாட்டல் உனக்கு உதவாது. நீ அந்த கட்டத்தைக் கடந்துவிட்டாய். உனக்கு இப்போது தேவை நல்ல ஓரு ஆசிரியர். பக்கத்து ஊரில் ஒரு நல்ல ஆசிரியர் இருக்கிறார். அவரிடம் செல். சேவைசெய்து கல்வியைக் கற்றுக்கொள்’ என்கிறார்
ஆனால் பையன் மேலும் கேட்கிறான். அவர் அவனை நுட்பமாக புரிந்துகொண்டு ‘ஆம், உனக்கு சாதாரணமான ஒரு ஆசிரியன் போதாது. அவர்கள் உனக்கு மொழியை மட்டுமே கற்றுத்தருவார்கள். நீ காஞ்சிக்குப் போ. அங்கே ஒரு பேரறிஞர் இருக்கிறார். நீ அவரிடம் சென்று கற்றுக்கொள்’ என்கிறார்.
அவன் மேலும் உரையாடவே அவர் இன்னும் அவனை புரிந்துகொண்டு ‘நீ கற்கவேண்டியது என ஏதும் இனி இல்லை. கல்வி உனக்கு இனி சுமையாகவே ஆகும். நீ உணரவேண்டியவையே உள்ளன. என்னுடன் என் சீடனாக வா’ என்கிறார்.
இங்கே அவர் சொன்ன ஒவ்வொரு படியும் ஒன்றை ஒன்று மறுப்பவை. அவர் சொல்லும் வழிமுறைகளை மட்டும் தனியாக எடுத்து பார்த்தால் முரண்பாடுகளே மிஞ்சும். ஆனால் அவை அச்சீடனுடனுடனான உரையாடல் என்று புரிந்துகொண்டால் அந்த முரண்கள் முரண்களல்ல படிகள் என்று தெரியும்.
இதுவே கீதையின் முரணியக்கம். இந்த முரணியக்கத்தை கீதை யோகம் என்கிறது. முரணியக்க அணுகுமுறை வேதாந்தத்தின் அடிப்படை. அதற்கு யோகாத்ம மார்க்கம் என்று பெயர். கீதையின் ஒவ்வொரு அத்தியாயமும் யோகம் என்று முடிவது இதனால்தான். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் யோகசாஸ்திரமாகிய கீதையின் அத்தியாயம் அது என்ற தொகுப்பு வரி வருவதைக் கவனிக்கலாம்.
நெடுங்காலமாகவே அத்வைத குருகுலங்களில் இந்த முரணியக்க அணுகுமுறையே பயிலப்பட்டு வந்தது. நாராயண குரு அந்த முறையை தன் ஆசிரியர்களிடமிருந்து கற்றார். அதை நடராஜகுருவுக்கு கற்பித்தார். நடராஜகுருவின் கீதையுரை அந்த நோக்கில் எழுதபப்ட்ட ஒரு மாபெரும் நூல்.கீதை உரைகளில் அது ஒரு கிளாசிக். பிற்பாடு சின்மயானந்தர் போன்றவர்கள் அந்நூலையே முன்னுதாரணமாகக் கொண்டார்கள் என்பதை எளிதில் காணலாம்.
கீதையை ஒற்றைப்படை உபதேச நூலாகக்கண்டவர்கள் அந்நூலை குருகுல அமைப்பு இல்லாமல் கற்ற மேலை நாட்டு அறிஞர்களே. அதேபோல அதன் யோக முறையை வெறும் நல்லுரையாக காணும்போக்கு முறையான தத்துவ- குருகுல கல்வி இல்லாத பக்தர்களிடமும் காணப்படுகிறது. கீதையை பல வகையான தவறான, குறைபாடான புரிதல்களுடன் அறிய வழிவகுக்கும் போக்கு இது
சாமானிய வாசிப்பில் யோகம் என்ற சொல் பலவகையான பொருட்குழப்பங்களை உருவாக்குகிறது. இந்திய சிந்தனைமரபில் யோகம் என்பது பல்வேறு பொருளில் வரக்கூடிய ஒரு சொல்லாகும். யுஜ் என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்தது அது. இணைதல் ஒன்றுகூடுதல் என்ற பொருள் அதற்குண்டு
வேதங்களில் யோகம் என்பது கூடுகை, கூட்டம்,சபை என்ற பொருளில்தான் பெரும்பாலும் பயின்று வருகிறது. பின்னர் இறைவனுடன் அல்லது பிரம்மத்துடன் ஒன்றாக இணைவதைச் சொல்லக்கூடிய வார்த்தையாக அது வேதாந்த மரபுகளில் பயன்படுத்தப்பட்டது. சாங்கியம் வைசேடிகம் போன்ற மரபுகளில் அது ஒன்றுக்கொன்று முரண்படும் பொருட்கள் செயல்தளத்தில் ஒன்றாகக் கலப்பதை சுட்டிக்காட்டுவதற்காக கையாளப்பட்டது.
சாங்கிய மரபில் புருஷ தத்துவம் உள்ளே வந்தபின்னர் புருஷனும் பிரகிருதியும் இணையும் புள்ளியைச் சுட்டிக்காட்ட யோகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. சாங்கிய மரபின் ஒரு பிரிவாக இருந்த யோகமரபில் முதலில் அந்த பொருளிலேயே யோகம் என்ற சொல் கையாளப்படுகிறது.
அதாவது மூல இயற்கையும் பரமபுருஷனும் ஒன்றையொன்று சார்ந்து இயங்கும் இரு அடிப்படை சக்திகள். எளிதில் இதை புரிந்துகொள்ள ஓரு வழி சொல்கிறேன். இந்தபிரபஞ்சத்தில் உள்ள அத்தனை பொருளையும் ஒன்றாகச் சேர்த்தால் அதுதான் மூல இயற்கை. இந்தபிரபஞ்சத்தில் உள்ள அத்தனை பிரக்ஞையையும் ஒன்றாகச் சேர்த்தால் அதுதான் பரமபுருஷன்.
புருஷன் இயற்கைக்கு சாட்சி. இயற்கையில் உள்ள மூன்று குணங்களான சத்வகுணம் ரஜோகுணம் தமோகுணம் ஆகியவை புருஷன் பார்ப்பதன் மூலமே உருவாகி வரக்கூடியவை. அந்த முக்குணங்களும் ஆதி இயற்கையில் சமநிலையில் இருக்கின்றன. அவற்றின் சமநிலை குலையும்போது ஆதிஇயற்கை பலபலவாக பிரிந்து அளவில்லாத பேதங்கள் கொண்ட இயற்கையாக மாறுகிறது.
அது பிரியும்போது புருஷனும் பலகோடி தனி பிரக்ஞைகளாக மாறுகிறான். இந்த தனி புருஷன் இயற்கையை பார்ப்பதன் மூலமே நாம் காணும் இந்த பிரபஞ்சம் உருவாகி வருகிறது. இதுவே பிரபஞ்சம் உருவான முறைக்கும் சாங்கியம் கூறும் விளக்கமாகும்.
இந்த புருஷன் தன்னை பலதுளிகளாக பிரித்துக்கொண்டு அதில் ஒரு துளியில் நின்று பார்க்கும் பார்வையே நம்முடைய பார்வை. அவன் அந்த தனிப்பிரக்ஞையை உதறி தன்னை தொகுத்துக்கொண்டு பரமபுருஷனின் ஒட்டுமொத்த முழுமைப்பார்வையை அடைந்தான் என்றால் அவன் கண்முன் இயற்கையும் தன் பேதங்களை களைந்து ஒற்றைப்பேருருவாக, ஆதி இயற்கையாக, வந்து நிற்கும். இந்த இணைந்த முழுமைப்பார்வை யோகம் எனப்பட்டது.
சாங்கியத்தின் துணைத்தரிசனமாக யோகம் உருவாகி பின்னர் பிரிந்து தனி தரிசனமாக ஆகியது. அதன் அடிப்படைகளை தொகுத்து பதஞ்சலி முனிவர் யோகசூத்திரம் என்ற நூலை உருவாக்கினார்.
பதஞ்சலி யோக சூத்திரம் சொல்லும் யோகம் என்பது மனதை நிறுத்தி பிரக்ஞையை தனியுணர்வு இல்லாத நிலைக்கு கொண்டு சென்று முழுமை நோக்கை அடைவதுதான். இதை ஆற்றை நிறுத்தி மலையுச்சியில் அதன் உற்பத்தி இடத்துக்கு திருப்பிக்கொண்டுசெல்வது போன்றது எனலாம்
‘யோக: சித்தவிருத்தி நிரோத:’ என அது ஆரம்பிக்கிறது யோகசூத்திரம். மனமெனும் செயலை தடுத்தல்தான் அது. நான் எனது என்ற மன இயக்கத்தை தடுப்பது. ஒட்டுமொத்தமாக ஆவது. அதுதான் யோகம். அந்த நிலையை அடைய பல வழிகளை பதஞ்சலி யோக சூத்திரம் சொல்கிறது. பிற்பாடு அந்த வழிகளும் யோகம் எனப்பட்டன.
அதன்பின் காலப்போக்கில் அந்த வழிகளில் ஒரு பகுதியான உடற்சார்ந்த பயிற்சிகள் யோக ஆசனம் [யோகத்தில் அமர்ந்திருக்கும் முறை] என்ற சொல்லால் அழைக்கப்பட்ட்ன. அது சுருங்கி இன்று அதுவே யோகம் என்று அழைக்கப்படுகிறது.
இவ்வாறு யோகம் என்ற சொல் பல தளங்களில் கையாளப்படுகிறது. ஒன்ரு, அதாவது கூட்டம்,இணைதல் என்ற பொருளில். இரண்டு, ஒருங்கிணைந்த முழுமை நோக்கு என்ற பொருளில். மூன்று, யோகம் என்ற தனியான தரிசனம் என்றபொருளில் ,நான்கு அந்த தரிசனம் காட்டும் செயல்முறைகள் என்ற பொருளில். கடைசியாக, முரணியக்க நோக்கு என்ற பொருளில்.
கீதையில் இந்த மூன்று பொருளிலும் யோகம் என்ற சொல் பயின்று வருகிறது. கீதை தன்னை ஒரு யோகசாஸ்திரம் என அழைத்துக்கொள்வது முரணியக்க அணுகுமுறை கொண்ட நூல் அது என்ற பொருளியேலே. சாங்கியயோகத்தின் கடைசிப்பாடல்களில் யோகதரிசனம் பேசப்படுகிறது. பலவரிகளில் யோகம் என்று ஒன்றுகூடுவதே சொல்லப்படுகிறது. பிற்பகுதிப்பாடல்களில் யோகமென்னும் செயல்முறைகுறித்து சொல்லப்படுகிறது
அனைத்தையுமே யோகம் புரிதல் என்ற பொருளில் கீதை சொல்வதாக இன்று பலரால் பொருள்கொள்ளப்படுகிறது. யோக சாஸ்திரம் என்னும் சொல்லை வைத்துக்கொண்டு கீதை நேரடியாகச் சொல்லும் பொருளுக்கு அடியில் பல மர்மமான யோகமுறைகளை குறிப்பாலுணர்த்துகிறது என்று சிலர் சொல்வதுண்டு. அவர்கள் ஒவ்வொரு சொல்லையும் மனம்போனவாக்கில் பிளந்து விளக்கி யோகப்பயிற்சி சார்ந்த பொருளைக் கொள்கிறார்கள்.
கீதை ஒரு அலோபதி மருந்து அல்ல என்பதை புரிந்துகொண்டால் போதும். நோயாளி போய் அமர்ந்ததுமே நாக்கை நீட்டுங்க என்று சொல்லி மார்பில் ஸ்டெதெஸ்கோப்பை வைத்துவிட்டு அதே நேரத்தில் மருந்தையும் எழுதிவிடும் டாக்டர் அல்ல கிருஷ்ணன். அனைத்து மனிதர்களுக்கும் ஒரே மருந்தை அவர் சொல்வதில்லை.
அவர் மனிதர்களின் இயல்புகளை, தேடல்களை அறிவார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மருந்தே தேவை என அறிவார். ஏனென்றால் கிருஷ்ணன் ஒரு தீர்க்கதரிசி அல்ல. ஒரு மாபெரும் ஞானமரபின் இடைவிடாத நீண்ட மரபின் நுனியில் உருவான ஞானி. ஆகவேஅவரது ஞானமும் பலமுறை பல தளத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இதனால்தான் கீதை மிகநுட்பமாக மனிதர்களை பகுக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் இயல்பு சார்ந்த மருந்தை அளிக்கிறது
நாம் கீதையை வாசித்தோம் என்றால் சாங்கிய யோகம் முதலே மனிதர்களை கீதை பகுக்க ஆரம்பிப்பதைக் காணலாம். நடைமுறை நோக்கு கொண்டவர்கள் தர்க்க நோக்கு கொண்டவர்கள் என்ற பிரிவினை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இதுவே கீதையின் வழிமுறை. ஒவ்வொரு வழியும் பிறிதொன்றுடன் முரண்பட்டுத்தான் இயங்குகிறது. இதற்காகவே யோகாத்ம மார்க்கம் கீதையில் கடைப்பிடிக்கப்படுகிறது.
காந்தி கீதையில் இருந்து எடுத்துக்கொண்டது கர்ம யோகத்தை. அரவிந்தர் எடுத்துக்கொண்டது ஞானயோகத்தை. ராமகிருஷ்ணர் எடுத்துக்கொண்டது மோட்ச சன்யாச யோகத்தை. எல்லா நிலைகளுக்கும் எல்லா மனங்களுக்கும் கீதை உரிய விடை அளிக்கிறது. ஒரு விடையில் இருந்து இன்னொரு விடைக்கு அர்ஜுனனின் கேள்விகள் வழியாக அது வழுக்கிச் செல்கிறது.
இந்த தொகுப்புமுறைக்காகவே அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் போர்க்களத்தில் சொன்ன உபதேசமாக அது அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் இலக்கிய நுட்பங்கள் முழுக்க முழுக்க இந்த தளத்திலேயே காணக்கிடைக்கின்றன. கீதை பேரிலக்கியமாக ஆவதும் இந்த தொகுப்புமுறைக்காகவே.
நடராஜகுரு பஞ்சாபில் ஒரு கீதைமாநாட்டுக்குச் செல்ல நேர்கிறது . அங்கே ஏற்கனவே பேசியவர்கள் அர்ஜுனன் அறிவிழந்து தடுமாறும்போது கிருஷ்ணன் மெய்ஞானத்தைச் சொன்னார் என்று பேசினார்கள். தான் பேச எழுந்ததுமே நடராஜகுரு கேட்டார் ‘என் சுயநலத்துக்காக மூத்த பெரியவர்களையும் சகோதரர்களையும் கொல்ல மாட்டேன் என ஒருவன் சொன்னால் அது அறிவின்மையா என்ன?’ அங்கே உள்ளவர்களால் பதில் சொல்ல முடியவில்லை
குருவே விளக்கினார். கீதையின் தொடக்கத்தில் அர்ஜ்ஜுனன் சொல்லும் அந்த துயரம் மிக்க சொற்கள் அறியாமையைக் காட்டுவன அல்ல. அது ஒரு மாபெரும் விவேகம். சாதாரண மனிதனுக்கு அது வராது. என் நன்மைக்காக நான் பிறருக்கு தீங்கிழைக்கப்போவதில்லை என்று ஒருவன் சொல்வதென்பது ஒரு மன உச்சம்தான். ஓர் உண்மைஞானம்தான் அது.
அர்ஜ்ஜுனன் அந்நிலைக்கு வந்து நின்ற காரணத்தால்தான் கீதை அவனுக்குச் சொல்லப்பட்டது. எந்த குருவும் சீடனின் அறியாமையைக் கண்டு அவனுக்கு கற்பிக்க ஆரம்பிக்க மாட்டார். அவனுடைய அறிவை கண்டபின் மேலும் அறிவை அளிப்பதற்காகவே கற்பிக்க ஆரம்பிப்பார். அர்ஜுனனின் அந்த மனசஞ்சலம் ஒரு பெரிய விவேகம். ஆகவேதான் கிருஷ்ணன் அவனுக்கு கீதையை உள்வாங்கும் பக்குவமிருப்பதாகச் சொன்னார்.
கிருஷ்ணன் ‘ நீ ஞானியரின் சொற்களைச் சொல்கிறாய்’ என்று அர்ஜுனனிடம் சொல்வது கிண்டலாகத்தான் என்று பலரால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அது தவறு. அது ஞானியரின் சொல்லேதான். ஆகவேதான் அந்த அத்தியாயமும் அர்ஜுன விஷாத யோகம் என்று சொல்லப்ப்ட்டுள்ளது. அதுவும் ஒரு யோகமே. அது கேள்வி மட்டும் உள்ள அத்தியாயம் அல்ல, அது ஒரு பதில்தான். முதற்கட்ட பதில்.
ஒரு சாதாரண லௌகீக மனிதனைப்பொறுத்தவரை அர்ஜுனன் சொல்லும் அந்த வரிகளே அவனுக்கு போதுமானதாகும். ‘என் சுயநலமல்ல என் சுற்றமும் நாடும் வாழவேண்டும் என்ற பொதுநலமே எனக்குத்தேவை’ என ஒருவன் உணர்ந்தால் அதுவே அவனுக்கு போதும். அதுவே அவனுக்கு விடுதலை அளிக்கும். அது பொய்யல்ல அது ஓரு உண்மை.
அந்த உண்மைக்கு மாறாக இன்னும் பெரிய உண்மையை முன்வைக்கிறது கீதை. சாமானியதளத்தில் இருந்து விசேஷ தளத்துக்கும் அதற்கு மேலே அதிவிசேஷ தளத்துக்கும் செல்கிரது. லௌகீகத்தில் இருந்து ஆன்மீகத்துக்கும் ஆன்மீகத்தில் இருந்து தூயமெய்ஞானத்துக்கும் செல்கிறது.
அதாவது அறியாமைக்கு எதிராக அறிவை முன்வைக்கும் நூல் அல்ல கீதை. அறிவுக்கு எதிராக இன்னும் பெரிய அறிவை முன்வைக்கும் நூல் அது. இதுவே கீதையின் முரணியக்கமாகும்.
அர்ஜுனன் சொல்வது ஒரு சாமானியனின் விவேகம். அதற்கு எதிராக ஒரு கடமைவீரனின் விவேகத்தை முன்வைக்கிறது சாங்கிய யோகம். அந்த கடமைவீரனின் விவேகத்துக்கு பிறகு அதைவிட முழுமைநோக்குள்ள ஒரு கர்மவீரனின் ஞானத்தை முன்வைக்கிறது. அதன்பின் ஒரு அறிஞனின் விவேகத்தைச் சொல்கிறது. கடைசியாக ஒரு ஞானியின் விவேகத்தை முன்வைத்து முடிகிறது. ஒவ்வொன்றும் முந்தையதில் இருந்து முரண்கொண்டு கிளைத்து விரிகிறது. இந்த முரணியக்கமே கீதையின் யோக சாஸ்திரமாகும்.
சின்ன வயதில் அம்மாவுடன் கோயில்களுக்குச் செல்வேன். நடந்துதான் போகவேண்டும். பல கிலோமீட்டர். அம்மா சொல்வாள். அதோ ஒரு தென்னைமரம் தெரிகிறதல்லவா, அதற்கு அந்தப்பக்கம்தான் கோயில் என்று. தென்னை மரம் தாண்டியதும் அதோ அந்த வீட்டுக்கு கொஞ்சம் அப்பால்தான் என்பாள். அதன்பின் அந்த ஓடையை தாண்டினால் உடனே கோயில் என்பாள். அப்படி வழிச்சுமை தெரியாமல் கொண்டுசென்றுகொண்டே இருப்பாள்.
கண்ணன் ஒரு கனிவான அன்னை. அவனுக்கு வணக்கம்
நன்றி
[9-9-10 அன்று சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் தியான ஆசிரமம் பினாங்கில் ஜெயமோகன் உரை]