Wednesday, October 13, 2010

தமிழ்நாடு இரண்டாக பிரிக்கப்படுகிறது

ஒரு காலத்தில் துக்ளக்கில் டுமீல் செய்திகள் நிறைந்த ஒண்ணரை பக்க நாளேடு என்று போடுவார்கள். எல்லாரையும் சகட்டு மேனிக்கு கிண்டல் செய்வார்கள். நானும் ஒரு முயற்சி செய்து பார்க்கிறேனே!--

koottanchoru

தமிழ்நாடு இரண்டாக பிரிக்கப்படுகிறது!

தமிழகம் இரண்டாகப் பிரிகிறது! ஜூவி அதிரடி ரிப்போர்ட்!

அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கும் பனிப்போரில் கலைஞர் மிகவும் சோர்ந்துவிட்டாராம். தனக்குப் பிறகு தி.மு.க. இருக்குமோ இருக்காதோ என்ற பயம் வந்துவிட்டதாம். அதனால் குடும்பத்தில் எல்லா வாரிசுகளையும் ஒவ்வொருவராக கூப்பிட்டு வைத்துப் பேசினாராம். கடைசியில் குடும்பம், கட்சி எல்லாம் நலமாக இருக்க வேறு வழி இல்லை என்று இந்த முடிவுக்கு வந்திருக்கிறாராம். இதற்கு வழக்கம் போல பேராசிரியரிடம் யாரும் ஆலோசனை கேட்காதபோதும் அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம். கலைஞர் சோனியா, மன்மோகன் இருவரிடமும் கெஞ்சி கதறி சம்மதிக்க வைத்துவிட்டாராம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.

கலைஞர் முரசொலியில் இன்று உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம்:

உடன்பிறப்பே,
ஆறரைக் கோடி தமிழர்களுக்கும் ஒரே மாநிலம், ஆறு லட்சம் மிஜோக்களுக்கும் ஒரே மாநிலம் என்பது அநியாயம் இல்லையா! இதைக் கண்டு நீ பொங்கிட மாட்டாயா? நீ வீறு கொண்டெழுந்தால் அதை இந்த நாடு தாங்குமா? இல்லை நானிலம்தான் தாங்குமா? இதை எப்படி சரி செய்வது என்று நாலைந்து மாதமாக தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தேன். என் அறிவை கூர் தீட்டுவதற்காக தேசத் தந்தை காந்தியார் போல உண்ணாவிரதமும் கொள்ள உறுதி பூண்டேன். உற்றார் உறவினர் அரற்றினர்; இந்த வயதில் நீங்கள் உங்கள் உடலை வருத்திக் கொள்ளலாமா என்று கண்ணீர் விட்டுக் கதறினர்.

உனக்குத்தான் தெரியுமே? நாட்டுக்காக நான் என் உயிரையும் கொடுப்பேன் என்று! நேற்று இரவு எட்டு மணிக்கு உணவு உண்ட பிறகு இன்று காலை ஆறு மணி வரை எதுவுமே சாப்பிடவில்லை. பத்து மணி நேரம்! அறுநூறு நீண்ட நிமிடங்கள்! என் உடன்பிறப்பின் குறை தீர்க்க வழி ஒன்று என் விழியிலே புலப்படும் வரையில் என் உடலையே அழித்திடவும் தயாராக இருந்தேன். களைப்பிலே சற்று கண்ணயர்ந்தேன். என் கனவில் நம் ஒரே தலைவரான தந்தை பெரியாரும், இன்னும் ஒரு தலைவரான அறிஞர் அண்ணாவும் வந்தனர்; என்னைப் பார்த்து நகைத்திட்டனர். அந்நாளிலே சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று இல்லையா? தங்கம் பொங்கும் கொங்கு நாடும், கொண்டை போட்ட கெண்டை மீன் கண்கள் உள்ள பெண்கள் வாழும் தொண்டை நாடும், இன்னும் பாரி, ஓரி, காரி போன்றோர் வாழ்ந்து வீழ்ந்த சேரிகளும் இல்லையா? தமிழ் நாட்டை இப்போதைக்கு இரண்டாகப் பிரித்திடலாமே என்று ஆலோசனை தந்திட்டனர். ஆஹா, அருமையான யோசனை என்று நான் துள்ளிக் குதித்தேன். வழி கிடைத்துவிட்டதும், முப்பத்தி ஆறாயிரம் நொடிகளுக்கு பின் துணைவியார் தந்த காப்பியை அருந்தி என் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன்.

மதுரை, அதற்கு தெற்கே உள்ள பகுதிகள் இனி மேல் ஒரு தனி மாகாணமாக செயல்படும். அது பெரியார் காமராஜ முத்துராமலிங்க நாடு என்று அழைக்கப்படும். மதுரைக்கு வடக்கே உள்ள பகுதிகள் அண்ணா காயிதேமில்லத் அய்யன் திருவள்ளுவர் நாடு என்று அழைக்கப்படும். இரண்டு மாகாணங்கள்! இரண்டு முதலமைச்சர்கள்! தமிழா, உன் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்! முதல் முறையாக தி.மு.க. இரண்டு மாநிலங்களில் ஆட்சி அமைக்கப் போகிறது! மகிழ்ச்சிதானே! உன் மகிழ்ச்சியைக் காட்டு! மானாட மயிலாட நிகழ்ச்சியில் வருவது போல ஆடு, பாடு, கொண்டாடு!

ஜெயலலிதா அறிக்கை:
மிசோரத்தில் ஆறு லட்சம் மிஜோக்கள் இல்லை, ஏழு லட்சம் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர் இந்த நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார். குடும்ப சண்டையை தவிர்க்க நாட்டையே துண்டாடுகிறார். அன்று ஜின்னா இந்திய நாட்டை பிளந்தார். இன்று அண்ணா வழி வந்தவர் என்று சொல்லிக் கொள்ளும் இந்த தறுதலை தமிழ் நாட்டை பிளக்கிறார். அண்ணா, எம்ஜிஆர் வழி வந்த கடைசி தொண்டன் இருக்கும் வரை இது நடக்காது! நான் அடுத்த இரண்டு வாரம் கொடநாடு எஸ்டேட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுக்கப் போகிறேன். அப்புறம் மூடு இருந்தால் இன்னொரு அறிக்கை விடுவேன். அதற்கு பயந்தாவது இந்த தறுதலை இந்த திட்டத்தை கை விடட்டும்!

ராமதாஸ் அறிக்கை:

நாங்கள் இந்த திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால் இந்த புது மாநிலங்கள் சரியாகப் பிரிக்கப்படவில்லை. கலைஞரே சொன்னது போல சேர, சோழ, பாண்டிய, கொங்கு, தொண்டை, வன்னிய நாடுகள் உருவாக்கப்பட வேண்டும். அதனால் வன்னிய நாடு என்று ஒரு மாகாணம் உருவாக வேண்டும் என்று எல்லா வன்னியர்களும் அந்நியர்களும் போராட வேண்டும். இதற்காக இன்றிலிருந்து திண்டிவனம் அருகே உள்ள சாலைகளில் உள்ள எல்லா மரங்களும் வெட்டும் போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தை காடுவெட்டி குரு தலைமை ஏற்று நடத்துவார்.

சோ ராமசாமி தலையங்கம்:

சாலமன் தாய்மார்களின் சண்டையை நிறுத்த முடியாமல் குழந்தையை இரண்டாக வெட்டுகிறேன் என்று சொன்னானாம். இங்கே சகோதரச் சண்டை நாட்டை இரண்டாக்குகிறது. இது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு கேடு. இதை எதிர்க்க எல்லாரும் சேர்ந்து நரேந்திர மோடியை தமிழகத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும்.

விஜயகாந்த் அறிக்கை:

மிசோரத்தில் ஆறு லட்சமும் இல்லை, ஏழு லட்சமும் இல்லை. அங்கே இருப்பது எட்டு லட்சத்து முப்பதாயிரத்து அறுநூற்று நாற்பத்தி இரண்டரை மிஜோக்கள். இந்த அரை என்று நான் சொல்வது ஐந்து மாத கர்ப்பமாக இருக்கும் மிஜோரத்து இளம் பெண் ஆங் சிங் சூவை.

காங்கிரஸ் தலைவர்கள் சத்தியமூர்த்தி பவனில் பேட்டி:

நமது நிருபர்: தமிழகம் பிரிக்கப்படுவதைப் பற்றி உங்கள் நிலை என்ன?
தங்கபாலு: இது பற்றி மேலிடம்தான் கருத்து சொல்ல வேண்டும்.
நமது நிருபர்: இன்றைக்கு இங்கே டிஃபனுக்கு பஜ்ஜியா பக்கோடாவா?
(ஒரே நேரத்தில்)
பீட்டர் அல்ஃபோன்ஸ்: இது பற்றி மேலிடம்தான் கருத்து சொல்ல வேண்டும்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்: மிக்சர்
ஜி.கே. வாசன் விறுவிறுப்பாக ஏதோ எழுதத் தொடங்குகிறார்.
நமது நிருபர்: என்ன எழுதுகிறீர்கள்?
ஜி.கே. வாசன்: எப்படி இளங்கோவன் கட்சி கட்டுப்பாட்டை மீறுகிறார் என்று சோனியாவுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
கார்த்திக் சிதம்பரம்: என்ன கடிதம் எழுதுகிறீர்கள் என்று நீங்கள் சொல்வது கட்சி கட்டுப்பாட்டை மீறுவதாகும். இது பற்றி கட்சி மேலிடம் அல்லவா கருத்து சொல்ல வேண்டும்? நீங்களே எப்படி சொல்லலாம்?
பேட்டி அடிதடியில் முடிகிறது. நமது நிருபர் மிக்சர் சாப்பிடாமலே ஓட்டம் பிடிக்கிறார்.

குமுதம் ரிப்போர்ட்டர்:

குடும்பத்துக்குள் சொத்து தகராறு என்று வந்துவிட்டது, பாகப்பிரிவினைதான் ஒரே வழி என்று ரொம்ப நாளாகவே தயாளு அம்மா சொல்லிக் கொண்டிருக்கிறாராம். அழகிரிக்கு தென் தமிழகம், ஸ்டாலினுக்கு வட தமிழகம், கனிமொழிக்கு மத்திய மந்திரி பதவி, தயாநிதி மாறன் டெல்லி அரசியலை கவனித்துக் கொள்வார் என்று முடிவாகி இருக்கிறதாம். தமிழரசு, செல்வி எல்லாருக்கும் நேரடியாக வரிப்பணத்திலிருந்து ஒரு சதவிகிதம் வருஷா வருஷம் போய்விட வேண்டுமாம். கலைஞர் ரொம்ப தயங்கினாராம். அப்புறம் இனி மேல் வட தமிழ் நாடு அரசும் தென் தமிழ் நாடு அரசும் போட்டி போட்டுக்கொண்டு உங்களுக்கு விழா எடுக்குமே, விருது கொடுக்குமே என்று சொன்னதும்தான் ஒத்துக் கொண்டாராம்.

பசுமை தாயகம் விழா:

பசுமை தாயகம் நிர்வாகியும் பா.ம.க. தலைவர் ராமதாசின் மருமகளும் ஆன சௌம்யா கூடுவாஞ்சேரியில் ஐநூறு மரங்களை நடும் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்கு வன்னியரும் அந்நியரும் பெருந்திரளென வந்து விழாவை சிறப்புறச் செய்ய வேண்டும் என்றும் முன்னாள் சுகாதார அமைச்சர் அன்புமணி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதற்கு காடுவெட்டி குரு அழைக்கப்படுவாரா என்று கேட்டதற்கு அன்புமணி காடுவெட்டி குருவுக்கு அப்போது மரம் வெட்டும் வேலை இருப்பதால் வரமாட்டார் என்று சுருக்கமாக பதிலளித்தார்.

வீரமணி கருத்து:

இன மானம் காக்கும் தலைவர் கலைஞர். பெரியாரின் கனவை நிறைவேற்றிவிட்டார்.

கலைஞர் பேட்டி:

நீங்கள் மிஜோக்கள் பற்றி சொன்னது தவறான கணக்கு என்று ஜெயலலிதாவும் விஜயகாந்தும் சொல்லி இருக்கிறார்களே!

அவர்கள் அங்கே இருக்கும் பார்ப்பன வந்தேறிகளையும் சேர்த்து சொல்கிறார்கள். பார்ப்பனர்கள் தமிழர்களும் இல்லை, மிஜோக்களும் இல்லை. ஜெயலலிதா தன் பார்ப்பனத் திமிரால் அப்படி சொல்கிறார். அந்த பார்ப்பன சதி வலையில் கால் நூற்றாண்டு நண்பர் காப்டனும் விழுந்துவிட்டாரே! ஆனால் நான் பார்ப்பனீயத்துக்குத்தான் எதிரி, பார்ப்பனர்களுக்கு இல்லை என்பதை மறக்காதீர்கள்.
உங்களை தறுதலை என்று ஜெயலலிதா சொல்லி இருக்கிறாரே?
அந்த பெண் பிசாசு எப்போதும் நாகரீகமற்ற முறையில்தான் பேசும்.

உங்கள் திட்டத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளுமா?

உங்களிடம் ஒரு ரகசியம் சொல்கிறேன். ராகுல் காந்தி முதல்வர் ஆக வசதியாக உ.பி.இலிருந்து ஒரு புது மாநிலத்தை உருவாக்கலாம் என்று ஐடியா கொடுத்தேன், அன்னை சோனியா உடனே என் திட்டத்துக்கு பச்சை விளக்கு காட்டிவிட்டார்.

ராமதாஸ் தமிழ் நாட்டை இன்னும் பல பகுதிகளாக பிரிக்க வேண்டும் என்று சொல்கிறாரே!

ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் தலைக்கு ஒரே பையன்தானே? அவர்களுக்கு இரண்டு மூன்று பையன்கள் பிறந்தால் அவர்களுக்குள் பிரித்துக் கொள்வார்கள்.

காடுவெட்டி குருவின் மரங்களை வெட்டும் போராட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இவர் காடுவெட்டி குருவா விறகுவெட்டி குருவா?

இந்த போராட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வரப் போகிறீர்கள்?

அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி தரப் போகிறோம்.

வீரமணி நீங்கள் பெரியாரின் கனவை நிறைவேற்றுகிறீர்கள் என்கிறாரே? பெரியார் தமிழ் நாட்டை பிரிக்க வேண்டும் என்று சொன்னாரா?

அவர் பெரியார் என் கனவில் வந்ததை சொல்கிறார்.

பெரியார் காமராஜ முத்துராமலிங்க நாடு, அண்ணா காயிதேமில்லத் அய்யன் திருவள்ளுவர் நாடு என்று சொல்ல கஷ்டமாக இருக்கிறதே?

பெரியார் காமராஜ முத்துராமலிங்க நாடு என்பதை சுருக்கி அழகிரி நாடு என்று சொல்லலாம். அதே போல அண்ணா காயிதேமில்லத் அய்யன் திருவள்ளுவர் நாடு என்பதை சுருக்கி கலைஞர் கருணாநிதி நாடு என்று அழைக்கலாம்.

உங்கள் அடுத்த திட்டம் என்ன?

எனக்கு நானே திட்டம்! எனக்கு நானே எல்லா ஊரிலும் மணிமண்டபம் எழுப்பப் போகிறேன். இந்த மணிமண்டபங்கள் தமிழர்களுக்கு எழுச்சி ஊட்டும்.

அழகிரி-ஜெயலலிதா கூட்டு!

இன்று அழகிரி ஜெயலலிதாவை அவரது கொடநாடு எஸ்டேட்டில் சந்தித்தார். பிறகு தி.மு.கவுடன் கூட்டு சேர்வதாக ஜெயலலிதா அறிவித்தார். அவர்கள் உடன்படிக்கையின்படி அழகிரி தென் தமிழ்நாட்டு முதல்வராக இருப்பார். கொடநாடு எஸ்டேட் என்று ஒரு புது மாநிலம் உருவாக்கப்படும், அதற்கு ஜெயலலிதா முதல்வராக இருப்பார்.

கானா தப்பி ஓட்டம்!

ஸ்டாலின் ஆதரவாளரும், மாவட்ட செயலாளரும் ஆன கருப்பசாமி பாண்டியன் என்ற கானா நேற்று கள்ளத்தோணி ஏறி இலங்கையில் ஒரு தமிழர் காம்பில் சேர்ந்தார். தமிழர் காம்பில் ராஜபக்சே வசதிகள் செய்து தரவில்லையே என்று கேட்டதற்கு அடப் போப்பா உயிரோட இருக்கறதே பெரிய விஷயம் என்றார். இதைப் பற்றி கவிதாயினி கயல்விழி “இவர் கானா, ஓடிப் போனார், எங்கப்பா பெரிய ‘ஆனா’” என்று ஒரு கவிதை எழுதி கொண்டிருக்கிறார்.

ஸ்டாலின் அறிக்கை:

நானும் அழகிரியும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்படுவோம் என்று ஸ்டாலின் சோகமாக ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார்.
அழகிரி நாட்டுக்கு வர ஸ்டாலினுக்கு விசா மறுக்கப்பட்டது என்பதை துரை தயாநிதி மறுத்திருக்கிறார்.

நக்கீரன் ரிபோர்ட்:

ராமதாசும் ஜெயலலிதா பாணியில் செல்ல நினைக்கிறாராம். தைலாபுர நாடு என்று ஒன்று அமைந்தால்தான் பா.ம.க. ஆட்சி அமைக்க முடியும், அன்புமணி முதல்வராக முடியும் என்று யோசிக்கிறாராம்.

அழகிரி முழக்கம்!

யாரிடமும் பிடி கொடுத்துப் பேசாத அழகிரியை நேற்று நம் நிருபர் விரட்டிப் பிடித்தார். ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம் மாதிரி ஏதாவது சொல்லுங்கள் என்று அழகிரியிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். அழகிரி சொன்னார் – “மதராஸ் மனதே!”