Wednesday, October 6, 2010

நகுலன் கவிதைகள் சில..

நகுலன் கவிதைகள் சில..

1,
நான்
சரி
நான் மாத்திரம்
சரியே சரி.


2,
"இப்போழுது
அங்குதான்
இருக்கிறீர்களா?"
என்றுகேட்டார்"
எப்பொழுதும்
அங்குதான் இருப்பேன்"
என்றேன்.

3,
ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
ப்ளாஸ்க்
நிறைய அய்ஸ்
ஒரு புட்டி
பிராந்தி
வத்திபெட்டி/ ஸிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவத்ற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

4,
நான் இறந்த பிறகு
எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள்
நடத்த வேண்டாம்.
ஏனென்றால்,
என்னால் வர முடியாது!’’

5,
எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புத்தகத்தில் எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!

6,
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல்
போகிறோம்!

7,

என்னைப்
பார்க்கவந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!
8,
யாருமில்லாதபிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!

9,
நீயிருக்கநானிருக்க
நேற்று இன்று நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!

10,
உன்னையன்றி
உனக்கு
வேறுயாருண்டு?

11,
ஆர்ப்பரிக்கும்
கடல்அதன் அடித்தளம்
மௌனம்
மகா மௌனம்!

12,
முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை
ஞானம்!

13,
வந்தவன் கேட்டான்
‘‘என்னைத் தெரியுமா?’’
‘‘தெரியவில்லையே’’ என்றேன்.
‘‘உன்னைத் தெரியுமா?’’என்று கேட்டான்.
‘‘தெரியவில்லையே’’ என்றேன்.
‘‘பின் என்னதான் தெரியும்’’ என்றான்.
‘‘உன்னையும் என்னையும் தவிர
வேறுஎல்லாம் தெரியும்’’என்றேன்!

14,
ராமச்சந்திரனா என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன் என்று
நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை.

15,
எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும் நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்
ன!

ஓர் எட்டுவயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும்





(நகுலனின் கதைகளில் எனக்கு மிகப் பிடித்த ஒன்று இது. கணையாழியில் 1992ல் வெளியானது, பிறகு காவ்யா பதிப்பகம் நகுலன் சிறுகதைகள் என்ற தலைப்பில் தொகுத்தது. காவ்யா பதிப்பகத்திற்கு நன்றியுடன் இதை இங்கே பகிர்கிறேன்).

என் அறையில் இருந்தேன். அந்த எட்டு வயதுக் குழந்தை வந்தது. அதன் தாய்மொழி மலையாளம். அது ஒரு கிராமத்தில் ஒரு சிறு வகுப்பில் படித்துக் கொண்டிருந்தது. கறுப்பிலும் கறுப்பு. அறிவு கனலும் கண்கள். அதன் பெயர் கலா. வீட்டில் சிமி என்று அழைப்பார்கள்.

கேட்டது: “மாமன், எனக்கு ஒரு பாட்டுப் புத்தகம் தருமோ?” சிறிது நேரம் சென்றபின், “மாமாவிடமிருந்து ஒரு புத்தகம் கொடுத்தால் போதும். விலை கொடுத்து வாங்க வேண்டாம்!” என்றது.

நான் நேரம் சிறிது சென்றபின் மலையாளத்தில் ’புது முத்திரைகள்’ என்ற கவிதைத் தொகுதியைக் கொடுத்த கணமே ஒரு ஐயம். அது மலையாளப் புதுக்கவிதையை அணுக முடியுமாவென்று. அடுத்து, அதற்கு ’குஞ்சுண்ணி’ யின் ‘கிங்கிணிக் கவிதைகள்’ என்ற தொகுதியை (அதில் சித்திரங்கள் இருந்தன)யும் வாங்கிக் கொடுத்தேன். குழந்தை ஒரு கிராமத்தில் L.P. பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்தது என்பதை மீண்டும் கூறவேண்டும்.

மறுநாள் குழந்தை என் அறைக்கு வந்தவுடன் ”புது முத்திரைகள் எப்படி?” என்று கேட்டேன். “படித்தேன்” என்றது. இதைச் சொல்லிவிட்டு, மாதவன் அய்யப்பத்து எழுதிய ‘பணி அறைக்குள்’ என்ற கவிதையிலிருந்து சில வரிகளை ஒரு உள்நாட்டத்துடன் இசை பூர்வமாகப் பாடிக் காண்பித்ததும் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. நான் அதனிடம் ”கிங்கிணிக் கவிதைகளோ?” என்று கேட்டேன். அது அதிலிருந்து ‘ஸைக்கிள்’ என்ற கவிதையின் ஒரு வரியை ‘வட்டத்தில் சவிட்டியால் நீளத்தில் ஓடும்’ வரியை மிகவும் சுய ஈடுபாட்டுடன் பாடிக் காண்பித்ததும் எனக்கு மீண்டும் ஒரு சில கவிதைகளைப் படித்துக் காட்டியது. அது எனக்கு ஓர் அனுபவமாகவெ இருந்தது. குழந்தை பாடப் பாட, நான் என் சூழ்நிலையிலிருந்து விலகி அதைக் கேட்ட வண்ணம் இருந்தேன். குழந்தை பாட, நான் கேட்க, அவ்வரிகள் என் பிரக்ஞையில் வட்டமிட்டன.

1. ஜன்ம காரணி
பாரதம்
ஆஹா ஆஹா ஆஹா
கர்ம மேதினி பாரதம்
நம்மளாம் ஜனகோடிதன்
அம்மையாகிய பாரதம்
ஆஹா ஆஹா ஆஹா

2. பல பல நாளுகள்
ஞானொரு புழுவாய்
பவிழக் கூட்டில் உறங்கி
இருளும் வெட்டமும் அறியாதே அங்ஙனே
நாள்கள் நீங்கி
அரளிச் செடியுடே
இலைதன் அடியில்
அருமக் கிங்கிணி போலே
வீசுங் காற்றத்தில் இளகி விழாதே
அங்கனே நின்னு

ஒருநாள் சூரியன்
உதிச்சு வரும்போள்
விடரும் சிறகுகள்வீசி
புறத்து வந்து அழகு துடிக்கும்
பூம்பாற்றை (வண்ணத்துப் பூச்சி)
தளிராய் விடர்த்து வீசும்
பனிநீர்ப்பூவில்
படர்ந்து பற்றியிருந்தது.
பூவில் துள்ளும் பூவதுபோலே
பூத்தேன் உண்டு களிச்சு.

அதன் குரல் நின்றதும் நான் மீண்டும் என் அறையில் புகுந்தேன். நினைவில் ஒரு கனவு வந்தது; வந்ததுபோல் அது மறைந்தது. இடையில் குழந்தை தன் பாட்டு வாத்தியார் பாடல்களை நன்றாகச் சொல்லிக் கொடுப்பார் என்றும் சொன்னது.

எனக்கு நவீன மலையாளக் கவிதைகளில் குஞ்சுண்ணியிடம் ஒரு தனிப்பட்ட பிடிப்பு உண்டு. அவர் கவிதைகளைக் குழந்தைகளும் பெரியவர்களும் அனுபவிக்க முடியும். அவர் கவிதைகளுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட தளங்கள் உண்டு. வரிவடிவம் ஒலிவடிவமாக கவிதையின் ஒலிச்சரடு விதவிதமான தளங்களிலே சுழித்துச் செல்வதைக் காண்கையில், அவைகளைக் கம்பன் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘செவிநுகர் கனிகள்’ என்றே சொல்ல வேண்டும்.

மறுபடியும் அந்தக் குழந்தை என் அறைக்கு வந்தது. ஒரு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியன் என்ற நிலையில் எனக்குச் சற்றுச் சுயமாக சிந்திக்கும் மாணவ - மாணவிகளிடம் ஒரு சாய்வு உண்டு. நான் அதனிடம் கேட்டேன்: “ஏன், உனக்குக் குஞ்சுண்ணிக் கவிதைகள் இஷ்டம்தானே? நீயும் அவர் மாதிரி சிலகவிதைகள் எழுதலாமே?” என்றேன். ”அதற்கென்ன எழுதலாமே” என்று சொல்லி என் அறையிலிருந்து மறைந்தது. ஒரு இசைவெட்டு.

ஒருநாள் வீட்டில் வழக்கமாகக் காய்கறிகள் வாங்குகிறவள் இந்தக் குழந்தையைப் பார்த்து “ஏ கறுப்பி” என்று கூப்பிட்டாள். எனக்கு ஒரு விதமான சஞ்சலம் ஏற்பட்டாலும் குழந்தையின் முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லை. சில சமயங்களில் அதன் முகத்தில் ஒருவித நிழல் படர்வதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு நாள் அதன் ’அம்மூம்மா’ (ஆச்சி) இந்தக் குழந்தைக்கு ஒரு ஜதை காதில் அணியும் சாதரண கறுப்புக் கம்மல்களைக் கொடுத்தவுடன் அடுத்த வீட்டிலுள்ள ஓர் இளம் பெண் “ஒ இதுவும் கறுப்பு” என்று சொல்லிச் சிரித்தது.

மறுபடியும் அந்தக் குழந்தை என் அறைக்குள் வந்ததும் அது என்னிடம் சொன்னது: “மாமன், மூன்று கவிதைகள் எழுதியிருக்கிறேன் பாருங்கள்”

குழந்தை சுய லயிப்புடன் அக்கவிதைகளைப் படிக்க, நான் என்னை மறந்து அவைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

சிமி
குமி
உமிக்கரி

நஞ்சு
குஞ்சு
மத்தைங்காய்

மணிக்குட்டன்
குணிக்குட்டன்
கொடுவாளை

குறிப்பு : சிமி குழந்தையின் பெயர். நஞ்சு குழந்தையின் தங்கையின் பெயர். கொடுவாளை - ஒருவகை மீன். மணிக்குட்டன் - குழந்தையின் தம்பியின் பெயர்.

மறுபடியும் என் அறைக்குள் நான் புகுந்து விட்டேன். குழந்தையில்லை; கவிதையில்லை; நான் என்று சொல்லப்படும் நானும் இல்லை.

அறை மாத்திரம் இருந்தது

நன்றி :ஜ்யோவ்ராம் சுந்தர்

எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றியினால் ஏற்படவிருக்கும் ‘பின்’விளைவுகள்

எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றியினால் ஏற்படவிருக்கும் ‘பின்’விளைவுகள்..

** ரஜினியை மீண்டும் வருங்கால முதல்வராக்க ஆரம்பித்து விடும் வாரமிருமுறை பத்திரிகைகள்.

** அவர் அப்படி அரசியலுக்கு எல்லாம் வந்துவிடக்கூடாது என்பதற்காக வாரம் ஒரு பாராட்டு விழா மஞ்சள் துண்டாருக்கு நடத்தி அதில் ரஜினியையும் கலந்து கொள்ள வைத்து விடுவார்கள்.

** அடுத்த படம் பற்றி பல ‘கதை’கள் வர ஆரம்பிக்கும்.

** ’வர்க்கமயமாக்கப்பட்ட சூழலில் எந்திரனின் மாசு ஏற்படுத்தியிருக்கும் தூசு’ என்கிற ரீதியில் தமிழ் வலையுலகில் ‘ஜெலூசில்’ புலம்பல்கள் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்காக ஓடிக் கொண்டிருக்கும்.

** சன் பிக்சர்ஸின் ஏகாதிபத்தியத்தை கண்டித்து ‘படத்தை புறக்கணியுங்கள்’ என்று நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று எந்திரன் திரைப்படத்தை சோமாலியாவில் பெரும் தோல்விப்படமாக மாற்றிய ‘தோழர்’களுக்கு நன்றி என்று சில பதிவுகள் வரலாம்.

** படத்தில் கடைசி சீனில் வரும் அந்த விளம்பர பெண் குழந்தைக்கு நல்ல எதிர்காலம். 2015-ல் தலைவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் பிரகாசம்!

** கூடிய விரைவில் ஒரு படத்தில் விவேக் ரோபோ மாதிரி வேஷமிட்டு அடி வாங்குவார்

** ’ரஜினி ரசிகர்கள்’ ரொம்ப நல்லவங்கய்டா.. காலைல 4.30 மணிக்கு ஷோ போட்டாலும் கூட்டமா கும்மிடுறாங்க என்று இனிமேல் நள்ளிரவு 12.30 மணிக்கெல்லாம் கூட திரையிடத் தொடங்குவார்கள்.

** ஜப்பானியர்கள் ஏற்கனவே காமிக்ஸ் பிரியர்கள். இனிமேல் ‘ரோபோ’ காமிக்ஸ் அங்கே வர ஆரம்பித்து விடும்.

** எந்திரன் எப்படி என்று மக்கள் தீர்ப்பு கொடுத்தாகிவிட்டது. எனவே இனிமேலும் அதை ஆதரித்து எழுதினால் நம்மை எவன் கவனிப்பான் என்ற கவலை சில பிரபலங்களுக்கு. எனவே எதிர்மறை கட்டுரைகள் வர ஆரம்பிக்கும்.

** ஷாரூக்கான் உள்ளிட்ட மூன்று நடிகர்கள் நான்கு நாட்களாக ஐந்து வேளையும் தண்ணீரும் கம்பலையுமாக ரூம் போட்டு கண்ணீர் விட்டு வருவதாகக் கேள்வி.

** சில வலைப்பதிவர்கள் எந்திரன் குறித்து ஒவ்வொரு சைட்டிலும் ஒவ்வொரு விதமாக எழுதுகிறார்கள். ஒன்றில் வசி. இன்னொன்றில் சிட்டி வெர்ஷன் 1.0, மற்றொன்றில் சிட்டி வெர்ஷன் 2.0. (அந்நியன் ரெமோ உதாரணத்தை எவ்வளவு நாட்கள் தான் சொல்வதாம்?!) இன்னும் எவ்வளவு வெர்ஷன் போகுமோ தெரியவில்லை! (ஹரன்பிரசன்னாவைச் சொல்வதாக நினைத்துக் கொண்டால் நாம் பொறுப்பல்ல!)

** சிட்டி ரஜினி ரயிலில் ஓடும் போது எச்சில் துப்புபவரின் மூஞ்சியில் எட்டி உதைக்கும் காட்சி ஷங்கர் மற்றும் ரஜினியின் பார்ப்பனியத்துவத்தை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது என்று ‘தோழர்’கள் எழுதப்போவதாகக் கேள்வி. வெற்றிலை, தாம்பூலம் போடும் சாஸ்திரிகளை காண்பித்து உதைக்கச் சொல்லியிருக்க வேண்டியது தானே என்பது தான் கேள்வியாம்!

** குப்பை படம், இந்த வார குட்டு, பரபரப்பு படம் என்று எழுத்தாளர்கள் எழுத ஆரம்பிப்பார்கள்.

நன்றி - மாயவரத்தான்

சத்யஜித்ரே - "சாருலதா"

Thanks:Suresh Kananan(sureshkannan2005@gmail.com)

"நீங்கள் உருவாக்கின திரைப்படங்களில் உங்களுக்கு அதிக திருப்தியை தந்த திரைப்படம் எது?" என்றொரு கேள்வி சத்யஜித்ரே முன் வைக்கப்பட்டது. அவர் தயக்கமேயில்லாமல் குறிப்பிட்ட திரைப்படம் "சாருலதா". "இதை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற நிலையில் 'இப்போது இருக்கிற அதே முறையில்தான் மீண்டும் இதை உருவாக்குவேன். அந்தளவிற்கு சொற்பமான குறைகளே கொண்டது. என்னுடைய பேவரைட் இதுவே" என்கிறார் ரே.

ரே ரசிகர்களால் பிரதானமாக கொண்டாடப்படுகிறதும் சர்வதேச அளவில் முதலில் பேசப்பட்ட இந்திய திரைப்படமான 'பதேர் பாஞ்சாலி'யை விட 'சாருலதா'வையே நான் அதிகம் கொண்டாடுவேன். உலகத்தின் சிறந்த பத்து திரைப்படங்களை பட்டியலிடச் சொன்னால் நான் எப்பாடு பட்டாவது ‘சாருலதா’வை உள்ளே கொண்டு வருவேன். அந்த அளவிற்கு என்னுள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய திரைப்படமிது. பாலியல் ரீதியான உறவுச் சிக்கலை இவ்வளவு நுட்பத்துடனும் subtle-ஆகவும் கையாண்ட எந்தவொரு உலகத் திரைப்படத்தையும் இதுவரை நான் கண்டதில்லை.





பயப்படாமல் தொடர்ந்து வாசியுங்கள்.

நான் இந்த இடுகையில் எழுதப்போவது இந்தத் திரைப்படம் குறித்த முழுமையான பார்வையல்ல. அப்படி எழுதினால் அது பத்திருபது இடுகைகளுக்காவது நீளும். அல்லது ‘பதேர் பாஞ்சாலி’ குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் எழுதின ‘நிதர்சனத்தின் பதிவுகள்’ போன்று இத் திரைப்படத்தையும் பற்றி யாராவது எழுதினால்தான் உண்டு. (ஒரு திரைப்படம் குறித்த முழுமையான அனுபவப்பகிர்வு தமிழில் நூலாக வெளிவந்தது அதுதான் முதல் என்று நினைக்கிறேன்).

நான் எழுதப் போவது இத்திரைப்படத்தில் என்னை பிரதானமாக கவர்ந்த குறிப்பிட்டதொரு காட்சியைப் பற்றி மாத்திரமே.

என்னுடைய வீட்டுத் தொலைக்காட்சியின் மேல் இத்திரைப்படத்தின் குறுந்தகடு நிரந்தரமாகவே வைக்கப்பட்டிருக்கும். இனிப்பை சாப்பிடுகிற சிறுவன் போல் அவ்வப்போது சில காட்சிகளை மாத்திரம் தேர்ந்தெடுத்து பார்ப்பேன். அவ்வாறான காட்சிகளில் நான் எழுதப்போகும் இந்த காட்சிக் கோர்வைதான் எனக்கு மிகவும் மிகவும் பிடித்தமானது. குறுந்தகட்டில் சம்பந்தப்பட்ட பகுதி தேய்ந்து நைந்து கூட போயிருக்கலாம்.

அதற்கு முன்னால் இத் திரைப்படத்தின் மற்றும் சம்பந்தப்பட்ட காட்சியின் முன்னோட்டத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.

தாகூரின் ‘சிதைந்த கூடு’ எனும் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் 1964-ல் வெளியானது. 19-ம் நூற்றாண்டின் இறுதியில், வங்காளத்தின் சுதந்திரப் போராட்டம் தனது தீவிரத்தை எட்டிக் கொண்டிருந்த காலத்தில் இத் திரைப்படத்தின் நிகழ்வுகள் அமைகின்றன. தான் நடத்தும் அரசியல் பத்திரிகையே கதி என கிடைக்கும் ஒரு பத்திரிகை ஆசிரியர். அவரது அரவணைப்பை ஏங்கி எதிர்பார்த்து கிடைக்காமல் தனிமையில் புழுங்கும் அவரது மனைவி. அவர்களது வாழ்க்கையில் இனிமையான குறுக்கீடாக நுழையும் ஒரு இளைஞன். இந்தப் பிரதானமான மூன்று பாத்திரங்களைச் சுற்றித்தான் இத்திரைப்படம் இயங்குகிறது.

()

சாருவின் தனிமையை புரிந்து கொள்ளும் ஆசிரியர், அவளுடைய பேச்சுத் துணைக்காக சாருவின் சகோதரையும் அவளுடைய மனைவியையும் தம்முடைய வீட்டிலேயே தங்க வைக்கிறார். மிகுந்த நுண்ணுர்வுள்ள சாருவிற்கும் அந்த சராசரி கிராமத்துப் பெண்மணிக்கும் அலைவரிசையின் மாறுபாட்டால் எந்த சுவாரசியமும் நட்பும் நிகழ்வதில்லை. இந்நிலையில் பத்திரிகை ஆசிரியரின் உறவுக்கார இளைஞன் (அமல்) ஊரிலிருந்து வருகிறான். மிகுந்த நகைச்சுவையும் இலக்கிய ஆர்வமும் உள்ளவன்.

‘சாரு’விடம் இயல்பாக பேசி அவளிடமுள்ள எழுத்துத் திறமையை வெளியே கொண்டுவர வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை அமலிடம் வைக்கிறார் ஆசிரியர். கவிதை எழுதும் பழக்கமுள்ள அவனுக்கும் புத்தக வாசிப்பு அனுபவமுள்ள சாருவிற்கும் உள்ள ஒரே அலைவரிசை காரணமாக நட்பு ஏற்படுகிறது.

இருவரும் தோட்டத்தில் அமர்ந்திருக்கும் ஒரு ஏகாந்தமான மனநிலையில், கவிதை எழுதத் தோன்றுவதாக கூறுகிறான் அமல். சாரு அவனுக்கென்றே பிரத்யேகமாக பெயரிடப்பட்ட ஒரு புத்தகத்தைத் தந்து அதில் எழுதத் சொல்கிறாள்.

தன்னுடைய கட்டுரை எழுதப்பட்டவுடன் வாசித்துக் காட்டுகிறான். ‘இதை எங்கும் பிரசுரிக்கக்கூடாது. இதில் எழுதப்படும் எதுவும் இதிலேயே இருக்க வேண்டும்’ என்ந நிபந்தனையை விதிக்கிறாள் சாரு. இதன் மூலம் அவளுடைய possessiveness குணம் தெரியவருகிறது. அவனும் விளையாட்டாக ஒப்புக் கொள்கிறான்.

“இனி உன்னுடைய முறை. நீ ஏதாவது கதை எழுத வேண்டும்” என்று அவளை திட்டமிட்ட பாதைக்கு நகர்த்தப் பார்க்கிறான். “எனக்கு எதுவும் எழுதத் தெரியாது” என்கிறாள் சாரு. “ஏன் உன் இளமைப் பருவ நினைவுகள், ஊர், திருவிழா என்று எவ்வளவு இருக்கும். அதை எழுது” என்கிறான் இளைஞன். “இல்லை என்னால் முடியாது” இது சாரு.

“அப்படியென்றால் பூபதிக்கு (பத்திரிகை ஆசிரியர்) நான் பதில் சொல்லியாக வேண்டும்” என்று வாய்தவறி உண்மையைக் கொட்டி விடுகிறான் அமல். அவளுடைய திறமையை ஊக்குவிப்பதில் அவளுக்கு எந்தச் சந்தேகமும் எழாமல் அது இயல்பாக நிகழ வேண்டும் என்று ஏற்கெனவே எச்சரிக்கை செய்திருக்கிறார் ஆசிரியர். தன்னுடைய கணவனின் உத்தரவின் பேரில்தான் இவன் இவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதைப் புரிந்து கொள்கிறாள் சாரு.

“நீ எழுதவில்லையெனில் நான் எழுதினதை பிரசுரத்திற்கு அனுப்பி விடுவேன்” என்று செல்லமாக மிரட்டுகிறான் அவன். “எதையாவது செய்து கொள்” என்று எரிச்சலுடன் எழுந்து போய் விடுகிறாள் சாரு.

()

சாருவின் அண்ணியிடம் தான் எழுதியதை எந்தப் பத்திரிகைக்கு அனுப்பலாம் என விளையாட்டாக ஆலோசனை கேட்கிறான் அமல். இலக்கியத்தைப் பற்றி எதுவுமே அறிந்திராத அவளிடம் கேட்பதை, ஒருவன் தான் முடிவெடுக்க முடியாத நிலையில் நாணயத்தை சுண்டி விடுவதற்கு ஒப்பாகச் சொல்லலாம். இரண்டு பத்திரிகைகளுக்கான வாய்ப்புகள் உள்ளன. ஒரு பத்திரிகை அவ்வளவு சுலபத்தில் புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை பிரசுரம் செய்யாது. எனவே இன்னொரு பத்திரிகைக்கு அனுப்ப முடிவு செய்கிறான்.

இடையில் அமலின் திருமணத்தை குறித்து உரையாடுகிறார் பத்திரிகை ஆசிரியர். தன்னுடைய விளையாட்டுப் பொம்மையை யாரோ பறித்துக் கொள்கிற உணர்வில் திகைத்துப் போகிறாள் சாரு. எதையுமே விளையாட்டாக அணுகும் அமல் இந்த திருமணப் பேச்சு உரையாடலையும் விளையாட்டாகவே அணுகுகிறான். அப்போதுதான் சாருவிற்கு புன்னகைக்கவே தோன்றுகிறது.

அமல் அனுப்பின கட்டுரை பிரசுரமாகி விடுகிறது. மிக உற்சாகமாக கத்திக் கொண்டே இந்தச் செய்தியை சாருவிடம் அறிவிக்கிறான் அவன். தன்னுடைய வேண்டுகோளை மீறி அவன் பத்திரிகைக்கு அனுப்பி, அது பிரசுரமும் ஆகி விட்டதே என்று சாருவிற்கு மிகுந்த ஆத்திர உணர்வு ஏற்படுகிறது. அமலின் மகிழ்ச்சியை முற்றிலுமாக புறக்கணிக்கிறாள். எப்படியாவது அவனுக்கு தன்னை நிருபித்து அவனை வெல்ல வேண்டும் என்கிற வன்ம உணர்ச்சி மேலிடுகிறது. எழுதுவதின் மூலம்தான் இதை சாதிக்க முடியும் என்று தோன்றுகிறது.

எழுத அமர்கிறாள். எதுவுமே தோன்றவில்லை. அழுகை வருகிறது. பிறகு நிதானமாக அமர்ந்து தன்னுடைய இளமைப்பருவ நினைவுகளை தோண்டிக் கண்டெடுக்கிறாள். ஒரு முடிவுக்கு வந்தவள் போல் எழுந்து கடகடவென்று எழுதத் துவங்குகிறாள்.

()

இதற்குப் பிறகுதான் நான் குறிப்பிட விரும்புகிற காட்சி வருகிறது.

காமிரா வேகமாக நடந்து வரும் ஒரு பெண்ணின் (சாரு) கால்களையும் கூடவே அவள் கொண்டு வருகிற பத்திரிகையையும் காண்பிக்கிறது.

அமலின் அறைக்குள் புயல் போல் நுழைகிற சாரு, ஆத்திரத்துடனும் அவனை வென்றுவிட்ட குரூர திருப்தியுடனும் பத்திரிகையைக் கொண்டு அவன் தலையில் ஓங்கி ஓங்கி அடிக்கிறாள். பின்பு பத்திரிகையை பிரித்து அவளுடைய கட்டுரையின் கீழ் பிரசுரமாகியிருக்கிற பெயரை “நன்றாக பார், திருமதி.சாருலதா” என்று காண்பிக்கிறாள். எந்தப் பத்திரிகை புதியவர்களை பிரசுரிக்காது என்று அமல் தயங்கினானோ அந்தப் பத்திரிகையில் சாருவின் கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது.

வேகமாக அறையை விட்டு வெளியேறி அவளுடைய அண்ணி அமலுக்காக தயாரித்து வைத்திருக்கிற வெற்றிலை பீடாக்களை தூக்கி எறிந்து விட்டு (இனிமே நானே தயாரிக்கிறேன். நீ அதிகம் சுண்ணாம்பு கலந்துவிடுகிறாய்) புதிதான ஒரு பீடாவை தயாரித்து அமலின் வாயில் திணிக்கிறாள்.

அமல் திகைத்துப் போய் அமர்ந்திருக்கிறான். சாருவிற்குள் இவ்வளவு திறமையான எழுத்தாளர் இருப்பார் என்று அவன் எதிர்பார்த்திருக்கவேயில்லை. முன்பு இருவரும் தோட்டத்தில் அமர்ந்திருந்த போது சாரு தான் அமர்ந்திருக்கிற ஊஞ்சலை ஆட்டி விடச் சொல்கிறாள். 'ஒரு எழுத்தாளரை இப்படி அவமானப்படுத்தலாமா?' என்று கேட்கும் அமல், பின்பு தன்னுடைய கட்டுரை பிரசுரமான போது "இனியாவது என்னிடம் மரியாதையாக நடந்து கொள்" என்று குறும்பாக அவளிடம் சொல்கிறான். இப்படியொரு திறமைசாலி என்பதை அறிந்திருந்தால், இப்படியெல்லாம் அவளிடம் விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டிருக்க மாட்டான் அவன்.

"நீ தொடர்ந்து எழுத வேண்டும் சாரு. நிறுத்தி விடாதே" என்கிறான். சாரு அந்தப் பத்திரிகையை தூக்கி எறிகிறாள். அவளைப் பொறுத்த வரை அவனை சவாலில் வென்றதே போதுமானது. "இனிமேல் எதையும் என்னால் எழுத முடியாது" என்கிறாள். ஆனால் அமல் எதை எதையோ சொல்லிக் கொண்டு போகிறான். அதற்கு மேலும் அவளால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. ஓடிவந்து அமலின் தோளின் மீது சாய்ந்து கொண்டு அழுகிறாள்.கண்ணீர் அவனுடைய சட்டையை நனைக்கிறது. தீவிரமான உடலுறவிற்குப் பின் ஏற்படுவதைப் போன்று நீண்ட மனக்கொந்தளிப்பிற்கு பின்பு ஏற்படுகிற ஆசுவாசம் அது.

அதுவரை சாருவை ஒரு தோழியாகவே காண்கிற அமல், இந்த நிகழ்விற்குப் பின்புதான் அவள் தன் மீது நேசம் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து கொள்கிறான். அவளுடனான உறவை ஒரு நெருடலாக அமல் உணரத் துவங்குகிற முதல் தருணம் அது.

()

நான் இப்படி விஸ்தாரமாக எழுதிக் கொண்டிருப்பதை, ரே தன்னுடைய திறமையான திரைக்கதையின் மூலம் மிக நுட்பமாகவும் பூடகமாகவும் பார்வையாளர்களின் முன் வைக்கிறார்.

அமோல், சாரு இருவரும் தோட்டத்திலிருக்கும் போது, சாரு தொலைநோக்கி மூலம் சுற்றி நடப்பதை கவனிக்கிறாள். இது அவளது வழக்கமான செய்கைகளில் ஒன்று. படத்தின் ஆரம்பக் காட்சியே அவ்வாறுதான் துவங்குகிறது. சாரு வீட்டு ஜன்னல்களின் மூலம் வெளியுலக நடமாட்டத்தை மிக நிதானமாக கவனித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது அங்கே வருகிற கணவன் ஏதோ நூலொன்றை எடுத்துக் கொண்டு சிந்தித்தபடியே செல்கிறான். சாரு அங்கு நிற்பதே அவன் பிரக்ஞையில் இல்லை. ஒரு பெருமூச்சுடன் சாரு மறுபடியும் தன்னுடைய தொலைநோக்கிக்குத் திரும்புகிறாள்.

தோட்டத்திலும் அதே போன்று தொலைநோக்கி மூலம் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு வீட்டில் ஒரு பெண்மணி அவளது குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் காட்சியை பார்த்தவுடன் சாருவின் ஆழமான தனிமை உணர்ச்சியும் தன்னுடைய வாழ்க்கை முழுமை பெறாமலிருக்கும் உணர்வும் வெளிப்படுகிறது. பின்பு தொலைநோக்கியை நகர்த்திக் கொண்டே வரும் போது தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் அமோலின் முகத்தைக் கவனிக்கிறாள். அவன் மீதான நேசத்தின் பொறி அப்போதுதான் அவளுக்குள் உருவாகியிருப்பதை பார்வையாளன் உணர்ந்து கொள்ள முடியும்.

அதே போல் அவள் கட்டுரை எழுதும் காட்சியும்.

கசக்கிப் போடப்பட்ட காகித உருண்டைகளை தொடர்ந்துச் செல்கிற காமிரா, அவள் முகத்தில் நிலைத்து நிற்கிறது. (பதிவின் ஆரம்பத்தின் உள்ள பட ஸ்டில்லை கவனியுங்கள்) பின்னணியில் ரேவின் அற்புதமான இசை ஒலிக்கிறது. மெதுவாக முன்னும் பின்னும் நகர்கிற காமிரா, அவளது முகத்தின் பின்னணியில் இளமைப் பருவ நினைவுக் காட்சிகளை காட்டுகிறது. காமிரா நிற்கும் போது சாருவும் தாம் என்ன எழுதப் போகிறோம் என்கிற தீர்மானத்தை அடைகிறாள்.

()

சாருவாக மதாபி மாதவி முகர்ஜி (Madhabi Mukherjee) மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். நிஜ வாழ்க்கையில் ரேவிற்கு இவர் மீது காதல் இருந்ததாகவும் பின்பு அது தோல்வியில் முடிந்ததாகவும் ஒரு கட்டுரை சொல்கிறது. உண்மைதான். மதாபி எந்தவொரு ஆணுமே விரும்பக்கூடிய பேரழகிதான். ஆனால் வெறுமனே அழகி மாத்திரமல்ல, சிறந்த நடிகையும் கூட.



அமலை அவள் பத்திரிகையால் ஓங்கி அடிக்கும் போது அவள் முகத்தில் வெளிப்படுத்துகிற உணர்வுகளை என்னுடைய எளிமையான வார்த்தைகளின் மூலம் விவரிக்கவே முடியாது. பார்த்து உணர வேண்டிய காட்சியது. அப்படியொரு ஆழமான முக பாவ வெளிப்பாட்டை இதுவரை நான் எந்தவொரு திரைப்படத்திலும் கண்டதேயில்லை.

இன்னும் நிறைய சொல்ல வேண்டியிருந்தாலும், வாசிக்கிற நீங்கள் சரியாக புரிந்து கொள்கிற படி எழுதிக் கொண்டிருக்கிறேனா என்கிற குழப்ப உணர்வு எழுதும் போது ஏற்பட்டுக் கொண்டேயிருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.சில விஷயங்களை எழுத்தின் மூலமாக சொல்லி விடவே முடியாது. 'நான் சாப்பிட்ட இனிப்பு நன்றாக இருந்தது' என்பதை எப்படி மற்றவருக்கு உணர வைக்க முடியும்? அவரும் அந்த இனிப்பை ருசிப்பதுதான் ஒரே வழி.

'பதேர் பாஞ்சாலி' திரைப்படத்தை காணும் சந்தர்ப்பம் ஏற்படாதவர்கள், தங்களின் வாழ்க்கையில் முழுமை பெறாதவர்கள்' என்று சுஜாதா ஒரு முறை எழுதிய ஞாபகம். நான் அதனுடன் 'சாருலதா'வையும் இணைக்க விரும்புகிறேன்.

image courtesy: wikipedia & satyagitray.org

suresh kannan

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!

நன்றி தினமணி

ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''

படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!

ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...

வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?

நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.

இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!