Wednesday, October 6, 2010

நகுலன் கவிதைகள் சில..

நகுலன் கவிதைகள் சில..

1,
நான்
சரி
நான் மாத்திரம்
சரியே சரி.


2,
"இப்போழுது
அங்குதான்
இருக்கிறீர்களா?"
என்றுகேட்டார்"
எப்பொழுதும்
அங்குதான் இருப்பேன்"
என்றேன்.

3,
ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
ப்ளாஸ்க்
நிறைய அய்ஸ்
ஒரு புட்டி
பிராந்தி
வத்திபெட்டி/ ஸிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவத்ற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

4,
நான் இறந்த பிறகு
எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள்
நடத்த வேண்டாம்.
ஏனென்றால்,
என்னால் வர முடியாது!’’

5,
எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புத்தகத்தில் எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!

6,
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல்
போகிறோம்!

7,

என்னைப்
பார்க்கவந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!
8,
யாருமில்லாதபிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!

9,
நீயிருக்கநானிருக்க
நேற்று இன்று நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!

10,
உன்னையன்றி
உனக்கு
வேறுயாருண்டு?

11,
ஆர்ப்பரிக்கும்
கடல்அதன் அடித்தளம்
மௌனம்
மகா மௌனம்!

12,
முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை
ஞானம்!

13,
வந்தவன் கேட்டான்
‘‘என்னைத் தெரியுமா?’’
‘‘தெரியவில்லையே’’ என்றேன்.
‘‘உன்னைத் தெரியுமா?’’என்று கேட்டான்.
‘‘தெரியவில்லையே’’ என்றேன்.
‘‘பின் என்னதான் தெரியும்’’ என்றான்.
‘‘உன்னையும் என்னையும் தவிர
வேறுஎல்லாம் தெரியும்’’என்றேன்!

14,
ராமச்சந்திரனா என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன் என்று
நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை.

15,
எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும் நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்
ன!

No comments:

Post a Comment